சூரிய சக்தி கூடார உலர்த்தி அமைக்க அரசு மானியம்

தர்மபுரி, ஆக.22: தர்மபுரி மாவட்டத்தில் சூரிய சக்தி கூடார உலர்த்தி அமைக்க, அரசு மானிய உதவி பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறுவடை செய்த விவசாய விளை பொருட்களை உலர்த்துவதற்கு உதவும் ‘சூரிய சக்தி கூடார உலர்த்தி’ அமைக்க விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் 50 சதவீதம் அல்லது அமைக்கப்படும் சதுர அடிக்கு ஏற்ப மானியம் வழங்கப்படும். அறுவடை செய்த விளைபொருட்களை வெளியே மண் தரையிலோ அல்லது சாலையிலோ உலர வைத்தால், தரைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியின் நிறம் மங்கியும், மேல் பகுதியிலுள்ள நிறம் வேறு மாதிரியாக இருப்பதாலும், பொருளின் தரம் குறைகிறது. சீரான மற்றும் கட்டுப்பாடான அளவில் உள்ள வெப்பத்தில் தூய்மையான இடத்தில் காய வைப்பதால் பொருளின் தரம் மேம்பட்டு இருப்பதுடன் குணமும், மணமும் மாறாமல் காக்கப்படுகிறது. சூரிய உலர்த்தியில் தேங்காய், வாழைப்பழம், பாக்கு மற்றும் மிளகாய் போன்ற விளைப்பொருட்களை இக்கூடாரத்தில் உலர்த்துவதால், விளைப்பொருட்களின் தரம் மதிப்புக்கூட்டும், பொருட்களாக மாற்றப்படுகிறது.

சூரிய உலர்த்தி கூடாரங்களை 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி பரப்பளவில் அமைத்துக் கொள்ளலாம். 400 சதுர அடி உள்ள சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைக்க, சுமார் ₹3 லட்சம் செலவாகிறது. 1000 சதுர அடி பரப்பளவில் இக்கூடாரத்தை அமைக்க, சுமார் 7 லட்சம் வரை செலவாகிறது. இதில் டிரே இல்லாமலும் அதிக செலவில்லாத பொருட்களை கொண்டு, தரைதளத்தினை அமைத்து இக்கூடார அமைப்பின் செலவை குறைத்துக் கொள்ளலாம். சூரிய சக்தி உலர்த்தி கூடாரத்தை அமைக்க செலவாகும் தொகையில், 60 சதம் தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 50 சதம் தொகை மானியமாக வழங்கப்படுகிறது. அதிக பட்சமாக ₹3.50 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. அரசு மானியத்துடன் சூரிய உலர்த்திக் கூடத்தை அமைப்பதற்கு, அனைத்து விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், தர்மபுரி மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், தர்மபுரி மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, கோவிந்தசாமி நகர், அரூர் ஆகிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு