தா.பழூரில் பலத்த மழை அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிட சுவர் இடிந்து சேதம்

தா.பழூர், ஆக. 22: தா.பழூரில் பெய்த பலத்த மழையால் அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிட சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. எனவே பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தா.பழூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. தா.பழூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பழைய பயன்பாடு இல்லாத கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இது பயன்பாட்டில் உள்ள புதிய கட்டிடத்தின் மீது விழுந்ததால் அதில் உள்ள மின்சார பெட்டி மற்றும் வயர்கள் சேதமடைந்தன.
மேலும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு உள்ள குடிநீர் குழாய் இந்த கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ளது. மதிய நேரங்களில் மாணவ, மாணவிகள் நிழலுக்காக இந்த பகுதியில் தான் அமர்ந்து உணவருந்துவது, படிப்பது மற்றும் ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இடிந்து கிடக்கும் சுவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பழமையாக உள்ள 2 கட்டிடங்கள், பழைய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் மெத்தனபோக்கில் இருந்து வருகின்றனர்.எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்ற வேண்டுமென பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...