திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டை விநியோகம்

* ஆயிரக்கணக்கில் வெளியே கொட்டுகின்றனர் * முட்டை கிடைக்காமல் ஏமாற்றத்தில் செல்லும் குழந்தைகள்


ஆரணி, ஆக.22: அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான முட்டைகளை வெளியே கொட்டி வருகின்றனர். இதனால் முட்டை கிடைக்காமல் குழந்தைகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,120 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், மாவட்டத்தில் 2,127 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அரசு சார்பில் மதிய உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு வழங்கும் முட்டைகள் தரமற்றதாகவும், அழுகிய நிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், சில பள்ளிகளில் முட்டைகளை வேக வைப்பதற்காக தண்ணீரில் கொட்டும் போது, அவை அழுகி கிடப்பது தெரியவருகிறது. இதுபோன்ற அழுகிய முட்டைகளை மாணவர்களும், அங்கன்வாடி குழந்தைகளும் உட்கொண்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.

குறிப்பாக ஆரணி, மேற்கு ஆரணி மற்றும் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு, பெரும்பாலும் அழுகிய முட்டைகளே வருவதால் பள்ளி நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். வேகவைத்த பிறகு தெரியவரும் அழுகிய முட்டைகள் மற்றும் கெட்டுப்போன முட்டைகளை அங்கன்வாடிகளின் பின்புறம் கொட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதேபோல் பல ஆயிரக்கணக்கான அழுகிப்போன முட்டைகள் ெவளியே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் முட்டை சாப்பிடும் ஆசையில் வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தொடர்ந்து நீடித்து வரும் இந்த பிரச்னை குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் பெற்றோர்கள், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டபோது, அழுகிய முட்டைகள் வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டை வழங்குவதில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பிடிஓ அலுவலகங்களில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும், கலெக்டரிடம் புகார் தெரிவித்தபோது, இன்னும் ஒருவார காலத்திற்குள் பிரச்னையை சரிசெய்வதாக கூறினாராம். ஆனால், புகார் தெரிவித்து பல மாதங்களாகியும் நடவடிக்கையில்லை.எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் தரமானதாக உள்ளதா? என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் ெபற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED தவறாக பயன்படுத்துகின்றனர் ஸ்மார்ட்...