×

அரசு பள்ளி சத்துணவு மைய நிலத்தில் மரங்கள் வளர்ப்பு

தர்மபுரி, ஆக.20: தர்மபுரி அதியமான் அரசு பள்ளியில், சத்துணவு மைய நிலத்தில் 50க்கும் மேற்பட்ட பலன் தரும் மரங்களை சத்துணவு அமைப்பாளர் வளர்த்து பராமரித்து வருவது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தர்மபுரி டவுன் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமார் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 460க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவு மைய அமைப்பாளராக நெடுஞ்செழியன் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சத்துணவு மையம் அருகே உள்ள காலி நிலத்தில் மரங்கள் வளர்க்க திட்டமிட்டார். இதனையடுத்து, கடந்த 5 வருடத்திற்கு முன்பு 3 முருங்கை மரங்களை நடவு செய்தார். அந்த மரம் வளர்ந்து முருங்கை காய் பலன் தந்ததையடுத்து கூடுதலாக மரம் வளர்க்க திட்டமிட்டு அதன் அருகருகே நெல்லி, காட்டு நெல்லி, கொய்யா, தென்னை, வாழை, சப்போட்டா, பப்பாளி, மாதுளை, கறிவேப்பிலை, மா என 50 மரங்களை நடவு செய்துள்ளார்.

இந்த மரங்களில் கொய்யா, கறிவேப்பிலை சப்போட்டா, நெல்லி, முருங்கை மரங்கள் பலன் தர துவங்கியுள்ளன. இதர மரங்களும் ஓரிரு ஆண்டுகளில் பலன் அளிக்க உள்ளன. இங்கு விளையும் கறிவேப்பிலை, முருங்கை காய்களை சத்துணவு மையத்தில் உணவு தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கொய்யா காய்களை மாணவர்களே பறித்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. நெடுஞ்செழியனின் மரம் வளர்க்கும் முயற்சியை மாணவர்களும், பிற ஆசிரியர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இதுபற்றி நெடுஞ்செழியன் கூறுகையில், ‘கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் பணியாற்றும் அதியமான் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வளர்த்து வருகிறேன். காலை 7 மணிக்கு மையத்திற்கு வந்து தண்ணீர் எடுத்து ஊற்றி மரங்களை பாதுகாத்து வருகிறேன். இதில் வரும் முருங்கை காய், கறிவேப்பிலை போன்றவை இங்கு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதர மரங்கள் வளர்ந்தால், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அவை நல்ல பலனை தரும் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும், ஆத்மதிருப்தியும் உள்ளது. இதுமட்டுமின்றி இங்கு படிக்கும் மாணவர்களும், தங்களது வீடுகளின் அருகே இதே போல் மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்,’ என்றார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா