திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக பரவலான மழை

திருவண்ணாமலை, ஆக.20: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து 3வது நாளாக பரவலான மழை பெய்தது. அதனால், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குப்பனத்தம், செண்பகத்தோப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து 3வது நாளாக மழை நீடித்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது. அதனால், மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டு தாலுகாவில் 76.40 மிமீ மழை பதிவானது. மேலும், தாலுகாவாரியாக ஆரணி 36 மிமீ, திருவண்ணாமலை 28.40 மிமீ, ஆரணி 35.20 மிமீ, செய்யாறு 18 மிமீ, செங்கம் 15.20 மிமீ, வந்தவாசி 64 மிமீ, போளூர் 28.20 மிமீ, தண்டராம்பட்டு 18 மிமீ, கலசபாக்கம் 47 மிமீ, சேத்துப்பட்டு 74.60 மிமீ, கீழ்பென்னாத்தூர் 21 மிமீ, வெம்பாக்கம் 49.20 மிமீ மழை பதிவானது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் 67.85 அடியாகவும், நீர்கொள்ளளவு 743 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழையில்லாத காரணத்தால், அணைக்கு நீர்வரத்து இதுவரை இல்லை.

அதேபோல், செங்கம் குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 30.65 அடியாகவும், நீர்கொள்ளளவு 165 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு தற்போது, வினாடிக்கு 136 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்திருக்கிறது. படவேடு செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 27.88 அடியாகவும், கொள்ளளவு 42.94 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 141 கன அடியாக உள்ளது. அதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் தொடர்ந்து பூஜ்ஜியம் என்ற நிலையிலேயே நீடிக்கிறது. நீர்பிடிப்பு பகுதியில் போதுமான மழையில்லை. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடிப்பட்ட சாகுபடி தீவிரமடைந்திருக்கிறது. மழை நம்பிக்கை அளித்துள்ளதால், இந்த பருவத்தில் அதிக பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அருகே பயங்கரம் லாரி...