அகலப்படுத்தப்பட்ட துறையூர் சாலையில் திடீர் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரிப்பு

நாமக்கல், ஆக. 14:  நாமக்கல்லில், அகலப்படுத்தப்பட்ட சாலையில் திடீர் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் துறையூர் சாலை, காவல் நிலையத்தில் இருந்து கொசவம்பட்டி வரை 1.2 கிமீ தூரத்துக்கு 4 வழிச்சாலையாக சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும்,  விபத்துக்களும் அதிகம் ஏற்பட்டு வந்ததால், அதை குறைக்கும் வகையில் ₹1 கோடியில் அகலப் படுத்தப்பட்டு சாலையின் நடுவில், தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை விஸ்தாரமாக மாறியது. விபத்துக்களை குறைக்கும் வகையில், அகலப்படுத்தப்பட்ட சாலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. துறையூர் சாலையின் இருபுறமும் தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிகமாக அமைந்துள்ளன. இங்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், சாலையை ஆக்கிரமித்து தங்களது டூவீலர் மற்றும் கார்களை பகலில் நிறுத்தி விடுகிறார்கள்.

இதனால் தினமும் காலை முதல் மாலை வரை துறையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பொதுமக்கள் வசதிக்காக சாலை அகலப்படுத்தப் பட்டுள்ளது. அதை மக்கள் தான் நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். வணிக நிறுவன உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள் வாடிக்கைகயாளர்களின் வாகனங்களை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக, வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் 1276 மையங்களில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து