எருமப்பட்டி வட்டாரத்தில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேந்தமங்கலம், ஆக.14:  எருமபட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர, வேளாண் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.  இதுகுறித்து எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எருமப்பட்டி வட்டாரத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், நடப்பு 2019-20ம் ஆண்டு காரிப் பருவத்திற்கு வட்டாரத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்க்கா மற்றும் வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். வறட்சி மற்றும் மழை போன்ற பேரிடர்களால் பயிர்கள் பாதிக்கும் போது, பாதிப்பிற்கேற்ப பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும். சோளப் பயிருக்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ₹294 ஆகும். அலங்காநத்தம் குறுவட்டத்தில் கெஜக்கோம்பை, போடிநாயக்கன்பட்டி, பொம்ம சமுத்திரம் அக்ரஹாரம், பொட்டிரெட்டிப்பட்டி, எஸ்.பழைய பாளையம், எருமப்பட்டி குறுவட்டத்தில் தோட்டமுடையான்பட்டி, சிங்களங்கோம்பை, முட்டாஞ்செட்டி, பவித்திரம், எருமப்பட்டி, வரகூர், சேந்தமங்கலம் குறுவட்டத்தில் புதுக்கோம்பை கிராமங்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள  பயிருக்கான பிரீமியம் ஏக்கருக்கு ₹507 ஆகும்.

நிலக்கடலை பயிரில் அலங்காநத்தம் குறுவட்டத்தில் எஸ்.பழையபாளையம், புதுக்கோட்டை, பாலப்பட்டி மிட்டா, பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி குறுவட்டத்தில் தேவராயபுரம், எருமப்பட்டி, காவக்காரன்பட்டி, கோணங்கிபட்டி, முட்டாஞ்செட்டி, பவித்திரம், பவித்திரம்புதூர், பொன்னேரி, சிங்களங்கோம்பை, மேட்டுபட்டி குறுவட்டத்தில் ஏ.மேட்டுப்பட்டி, எம்.மேட்டுப்பட்டியும், சேந்தமங்கலம் குறுவட்டத்தில் முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை ஆகிய கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிருக்கு பிரீமியம் தொகை ஏக்கருக்கு ₹496 ஆகும். சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் சேர்க்கைக்கான இறுதி நாள் வரும் 31ம் தேதி ஆகும். பயிர் காப்பீடு செய்திட முன்மொழிப்படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டைநகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல்களுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு பிரீமியத் தொகையை செலுத்தி, இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கடன் பிரச்னையால் வெள்ளிப்பட்டறை அதிபர் தீக்குளித்து தற்கொலை