அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு

அரியலூர், ஆக.14: அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்தது.அரியலூர் மாவட்டத்துக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள்குழு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன்தலைமையில் நேற்று வந்தது. இதைதொடர்ந்து கலெக்டர் வினய் முன்னிலையில் மாவட்டம முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.அதன்பட தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அரியலூரில் ரூ.28.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரியலூர்-பெரம்பலூர் இணைக்கும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை பார்வையிட்டனர்.பின்னர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6.16 கோடியில் 200 படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் கூடிய கட்டிட பணி, அதே கட்டிடத்தில் ரூ.88 லட்சம் மதிப்பில் தீயணைப்பு உபகரணங்கள் அமைக்கும் பணி, சம்ப் மூலம் தீயணைப்பு செய்யும் கட்டுப்பாட்டு அறை கட்டிடம், ரூ.40.50 லட்சம் மதிப்பில் சாய்தளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர்.

மேலும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் அரியலூர் நகராட்சி மூலம் 288 குடியிருப்புகள் தரைத்தளத்துடன், மூன்று மாடி அடுக்கு குடியிருப்புகள், ரூ.23.43 கோடி மதிப்பில் குறுமஞ்சாவடியில் குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவாக கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.ஆய்வின்போது சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் அன்பழகன், ஆறுமுகம், சக்கரபாணி, துரை.சந்திரசேகரன், தனியரசு, முருகன், விஜயகுமார், செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் சாந்தி, குழு அலுவலர் சகுந்தலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags :
× RELATED மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டை...