6 ஆண்டுக்கு முன் கொடுத்த மனுவுக்கு தீர்வு களரம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கம்

பெரம்பலூர், ஆக. 14: ஆறு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த மனுவுக்கு தீர்வ காணும் விதமாக பெரம்பலூரில் இருந்து களரம்பட்டிக்கு அரசு டவுன் பஸ்சை அரசு கொறடா இயக்கி வைத்தார்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. தமிழக அரசின் தலைமை கொறடாவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் தலைவருமான அரியலூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மனுக்கள் குழு உறுப்பினர்கள் சக்கரபாணி விஜயகுமார், தனியரசு, அன்பழகன், ஆறுமுகம், முருகன் ஆகிய எம்எல்ஏக்களும், பெரம்பலூர் மாவட்ட எம்எல்ஏக்களான ராமச்சந்திரன், தமிழ்செல்வன் ஆகியோரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டத்தில் குரும்பலூர் பேரூராட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவரால் அளிக்கப்பட்ட மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில் குரும்பலூர் அரசு கல்லூரி மாணவ, மாணவியரின் நலனுக்காக பெரம்பலூர்- துறையூர் சாலையில் கூடுதலாக பஸ் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைதொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த குரும்பலூர் ரமேஷ், சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் பேசும்போது, பஸ்பாஸ் பயன்படுத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்காக நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்தபோது 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. மனு கொடுத்த சில வாரங்களில் ஒரு டவுன் பஸ் ஏனோ நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு டவுன் பஸ் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்குங்கள் என கேட்டது தான் குற்றமா. இருந்ததையும் பிடுங்கி கொண்டனர். இதனால் பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ மாணவியர் நலன் கருதி பெரம்பலூர்-துறையூர் சாலையில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டுமென கேட்டிருந்தேன். நிறுத்தியதை மட்டுமல்ல கூடுதலாகவும் இயக்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பதவி வகிக்கும் ரமேஷ் விடுத்த கோரிக்கையை ஏற்ற அரசு கொறடா ராஜேந்திரன், அரசின் சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள். கூடுதல் பஸ் இருந்தால் இயக்காமலா போய் விடுவார்கள். அனுசரித்து போங்கள். உங்க கோரிக்கைக்காக இன்று (13ம் தேதி) முதல் கூடுதலாக ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்படும். அதை இந்த ஆய்வின் முடிவின்போது நானே இயக்கி வைக்கிறேன் என்று அரசு கொறடா ராஜேந்திரன் பதிலளித்தார். அதன்படி நேற்று மதியம் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் இருந்து களரம்பட்டிக்கு செல்லும் விதமாக அரசு டவுன் பஸ் நேற்று இயக்கி வைக்கப்பட்டது.
Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்