×

நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பேரணி

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 23: பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ேபரணி நேற்று நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு பேரணி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சார்பில் நடந்தது. இதில் தனிநபர் இல்லங்கள் தோறும், மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் தங்கள் இல்லங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பது குறித்து உறுதிமொழி ஏற்றனர். இதில் கல்லூரி முதல்வர், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாலக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சி சார்பில், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக 7வது வார்டு புது தெருவில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு, மழை நீரை சேமிப்பது, அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு உயரும், வீட்டில் பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக எப்படி பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை எப்படி தவிர்ப்பது, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. இதில் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை உதவியாளர் தங்கராஜ், மேற்பார்வையாளர் தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.பென்னாகரம்: பென்னாகரம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், ஓம்சக்தி நர்சிங் கல்லுரி நிர்வாகம் மற்றும் மாணவிகள் இணைந்து, மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி, தாலுகா அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மணியகாரர் தெரு வழியாக பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் மழைநீர் சேகரிப்பு, நீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா