×

ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தூய்மை பணி

பென்னாகரம், ஜூலை 23: ஒகேனக்கல் காவிரி கரையோரங்களில், தன்னார்வ இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இறந்தவர்களின், காரிய நிகழ்ச்சி செய்வதற்கு ஒகேனக்கல்லுக்கு வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் ஒகேனக்கல் முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் ஈம சடங்குகளை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய துணிகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வந்தது. எனவே இதை சீரமைக்கும் பொருட்டு, பென்னாகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றிணைந்து, முதலைப்பண்ணை காவிரி ஆற்றில் தூய்மை பணி மேற்கொண்டனர். தூய்மைப்பணியை தமிழாசிரியர் முனியப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெயம் தொண்டு நிறுவனத்தை சார்ந்த கென்னடி செய்திருந்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் கூத்தபாடி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தூய்மை பணியை மேற் கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா