அரக்கோணம் அருகே 2 இடங்களில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம், ஜூலை 19: அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு அடுத்தடுத்து 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சிறுணமல்லி ஊராட்சியில் 1200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுணமல்லி ஊராட்சிக்குட்பட்ட மேல்காலனி மற்றும் சம்பத்துராயன்பேட்டை ஆகிய கிராமங்களில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கவில்லையாம். நீண்ட தூரம் சென்று விவசாய கிணறுகளில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பிடிஓ அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மேல்காலனி பகுதி மக்கள் நேற்று காலை சிறுணமல்லி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், சம்பத்துராயன்பேட்டை பகுதி மக்கள் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மறியல் செய்தனர்.

தகவலறிந்த பிடிஓ அலுவலக ஊழியர் பீட்டர் ஆறுமுகம், சிறுணமல்லி ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி, விஏஓ குணசேகரன் மற்றும் நெமிலி போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘எங்கள் கிராமத்தில் சிறிது நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சிலர், சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். இதனால், போதிய அளவில் குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அதற்கு அதிகாரிகள், ‘2 இடங்களிலும் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர். இதையேற்று மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED காட்பாடி அருகே கொல்லப்பள்ளி...