நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை: திருவண்ணாமலை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலையில் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ₹6 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(51), இவரது அண்ணன் சவுந்தரராஜன் என்பவருக்கும் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா வழங்க கோரி இருவரும் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாயுடுமங்கலம் பிர்கா சர்வேயர் சக்திவேல் என்பவரிடம் மனு அளித்தனர். மனுவை விசாரித்த சர்வேயர் இருவரிடமும் தலா ₹3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத லட்சுமணன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். பின்னர் ₹6 ஆயிரத்தை, திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த சர்வேயர் சக்திவேலை சந்தித்து பணம் கொடுத்தார்.
 
அப்போது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கை நேற்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.சங்கர் விசாரித்து சர்வேயர் சக்திவேலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED கீழ்பென்னாத்தூர் அடுத்த...