திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் தர்மபுரி மாவட்ட சிறைச்சாலை

தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரி மாவட்டத்தில் புதிய சிறைச்சாலை கட்டுமான பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் கிளைச்சிறை உள்ளது. இச்சிறைச்சாலை கடந்த 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 46 கைதிகள் அடைத்து வைக்கும் வகையில் இச்சிறைச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது 46 கைதிகள் உள்ளனர். தர்மபுரி கிளைச்சிறையில் பெண்கள் தங்க வைப்பதில்லை.
ஆண்கள் மட்டுமே அடைத்து வைக்கப்படுகின்றனர். அதேபோல், கொலை குற்றவாளிகளையும் அடைப்பதில்லை. 113 ஆண்டுகள் ஆகியும் பழமை மாறாத கட்டிடமாக, தர்மபுரி கிளைச்சிறை உள்ளது. கைதிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் அவித்த பயறு வகைகள் வழங்கப்படுகிறது. கைதிகள் படிக்க தினசரி நாளிதழ்கள், உலக நிகழ்வுகள் தெரிந்து கொள்ள டி.வி. வசதி உள்ளன. கைதிகளின் குறைகள் அவ்வவ்போது கேட்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்படுகிறது. தினசரி அரசு மருத்துவர் சிறைக்கு சென்று கைதிகளின் உடல்நலத்தை பரிசேதிக்கிறார். உடல்நலம் குன்றி இருந்தால், அங்கேயே பரிசோதனை செய்து மருந்து-மாத்திரை வழங்கப்படுகிறது.

கைதிகளை உறவினர்கள் பார்க்க தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் அனுமதிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நேரில் பார்க்க அனுமதி இல்லை. 46 பேருக்கு மேல் தர்மபுரி கிளை சிறையில் அடைக்க அனுமதி இல்லை. தர்மபுரி மாவட்ட கைதி மற்றும் குற்றவாளிகள் சேலம், வேலூர் சிறைக்கு அழைத்துச்சென்று அடைக்கப்படுகின்றனர். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. ஒரு கைதியை சேலத்தில் இருந்து தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் அழைத்துச் செல்ல சுமார் ₹500 வரை செலவு ஆகிறது. இச்செலவை குறைக்கவும், வீண் அலைச்சலை தவிர்க்கவும், தர்மபுரி சோகத்தூர் ரவுண்டானா பதிகால்பள்ளம் அருகே மாவட்ட சிறைச்சாலை, கடந்த 2 ஆண்டாக கட்டப்பட்டு வந்தது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. புதிய மாவட்ட சிறை பயன்பாட்டிற்கு வந்தால், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கைதிகள் தப்பும் சம்பவங்கள் குறைந்துவிடும், கூடுதல் செலவும் தவிர்க்கப்படும். இதன் மூலம் அரசுக்கு நிதி சேமிக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்திற்கென தனியாக சோகத்தூர் அருகே புதிய மாவட்ட சிறை கட்டப்பட்டுள்ளது. மின்இணைப்பு மற்றும் பாதுகாப்பு சுவர் எழுப்பியும் இன்னும் திறப்புவிழா நடத்தப்படவில்லை. இதனால், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கைதிகள் மற்றும் குற்றவாளிகளை சேலத்திற்கும், வேலூருக்கும் அலைக்கழிக்கும் அவலநிலை தொடர்கிறது. இதனை தவிர்க்க, தர்மபுரி மாவட்ட புதிய சிறைச்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் நாளை 333 ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர்களுக்கு பயிற்சி