×

மாவட்டம் நவீனப்படுத்தும் பணிகள் முடிந்ததும் எக்கோ பார்க்கில் எகிறும் நுழைவு கட்டணம் பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை, ஜூலை 18: மதுரை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள எக்கோ பார்க்கில் நவீனப்படுத்தும் பணிகள் முடிந்ததும் நுழைவு கட்டணம் அதிகரிக்க இருக்கிறது.  இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தை திறந்தவெளி கழிப்பறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனராக இருந்த ககன்தீப்சிங்பேடி, வளாகத்தை சுற்றிலும் வேலி அமைத்து வெளியாட்கள் நுழையாத வண்ணம் தடுத்தார். தொடர்ந்து உள்ளேயே மரங்களை நட்டு வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு ராட்டினம், ஊஞ்சல் விளையாட்டு உபகரணங்ளை ஏற்படுத்தி எக்கோ பூங்காவாக உருவாக்கி அழகுபடுத்தினார். பின்னர் குளம் அமைத்து படகு சவாரி விட்டு, இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்றும், ராட்சத நீரூற்றும் அமைக்கப்பட்டது. மேலும் விளக்கு ஒளியில் மிளிரும் தென்னை உள்ளிட்ட செயற்கை மரங்கள் வைக்கப்பட்டன. இவையனைத்தும் பராமரிப்பின்றி  வீணாகி போயின.

இந்நிலையில் எக்கோ பார்க்கை நவீனப்படுத்த முடிவு செய்து அதனை தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைத்தது. இந்நிறுவனம் ரூ.70 லட்சம் செலவில் பின்னணி பாடலுடன் கூடிய இசைக்கு ஏற்ப நடன நீரூற்றும், அதே சமயத்தில் புரொஜக்டர் மூலம் படமும் திரையிடப்படும். திரை வடிவில் உருவாக்கப்படும் நீரூற்றில், திரைப்படம் தெரியும் வகையில், பார்க்க கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. பல்வேறு வண்ணங்களில் லேசர் விளக்கு ஒளியும் பாய்ச்சப்படுகிறது. தற்போது இப்பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இரவு 7 மணி, 9 மணி என இரு காட்சிகள் நடத்தப்பட இருக்கிறது. தற்போது நுழைவு கட்டணமானது 3வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. பூங்கா செயல்பாட்டிற்கு வந்தவுடன் நுழைவு கட்டணம் ரூ.5லிருந்து 50 ஆக எகிற இருக்கிறது.  பொதுமக்கள் கூறுகையில், ‘மதுரை மக்களுக்கு பொழுது போக்குவதற்கு சிறந்த இடமாக எக்கோ பார்க் இன்றளவும் இருந்து வருகிறது. இங்கு இதுவரை எங்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.5 என்பது ஒரு பெரிய செலவாக இருக்கவில்லை. தற்போது ரூ.50 ஆக கட்டணம் உயர்ந்தால், பூங்காவிற்குள் நுழைய முடியாத நிலைதான் ஏற்படும். எனவே கட்டண உயர்வை மாநகராட்சி கைவிட வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...