பிரம்மரிஷி மலையடிவாரத்தில் 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத வனத்துறை அலுவலக கட்டிடங்கள் மதுபாராக மாறி வரும் அவலம்

பெரம்பலூர், ஜூலை 18: எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத வனத்துறை அலுவலக கட்டிடங்கள் மது அருந்தும் பாராக மாறி வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட துறைகளில் இருக்கும் இடமே தெரியாமல் எந்த பணிகளாவது நடக்கிறதா என கேள்வி கேட்கும் அளவுக்கு பொதுமக்களுக்கு சம்மந்தமில்லாமல் ஒருதுறை உள்ளதென்றால் அது வனத்துறை தான் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதுவரை எஸ்பி அலுவலகம் பின்புற மாவட்ட வனத்துறை அலுவலகத்தின்கீழ் எந்த பணிகள் மாவட்ட அளவில் நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.பெரம்பலூரில் இளம்பெண் சடலத்தை வைத்து மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவர் 40க்கும் மேற்பட்ட கடல்குதிரைகளை சட்டவிரோதமாக வைத்திருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை விசாரித்தால் சர்வதேச கடத்தல் கும்பலிடம் இருந்து கடல்குதிரை கிடைத்ததா என்ற அதிர்ச்சி தகவல்களெல்லாம் வெளியாகியிருக்கும்.

தமிழக அளவில் முந்தைய முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 64 லட்சம் மரக்கன்றுகள் நடவிருந்ததில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டும் அவற்றை முழுமையாக நடாமலும், பராமரிக்காமலும் விட்டுவிட்டனர். இந்நிலையில் இவர்களின் மெத்தன போக்கால் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக திறக்கப்படாத வனத்துறை அலுவலக கட்டிடங்கள் காமக்களியாட்டங்கள் நடக்கும் கூடாரமாக மாறியுள்ளது.
எளம்பலூர் பிரம்மரிஷி மலையரடிவாரத்தில் புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் 2 வனத்துறை அலுவலக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை அந்த அலுவலகங்கள் திறக்கப்படாததால் தற்போது அவை கதவுகள் உடைக்கப்பட்டு மதுப்பிரியர்களின் பாராக மாறிவிட்டது. ஏற்கனவே தமிழகத்தில் மிகவும் அதிகமான புள்ளிமான்கள் பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்தாலும் அவற்றுக்கு தண்ணீர் வசதியைக்கூட செய்து தராமல் மான்கள் இறப்புக்கு காரணமாகவும், வேட்டையாடுவதை கண்டுகொள்ளாமலும் இருந்து வருகின்றனர்.
தற்போது அலுவலக கட்டிடங்களையும் அம்போவென விட்டுவிட்டதால் கேட்பாரற்று கிடக்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் விரைந்து தீர்வு காண வேண்டுமென மாவட்ட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடக்கிறது...