×

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல்

பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர் மாவட்டத்தில்ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல், பதவிஉயர்வு பெற்றவர்கள் ஒரு வாரமாக பணிகளில் சேர முடியாமல் திண்டாட்டி வருகின்றனர். இதனால் பணப்பயன், முன்னுரிமை பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர்.தமிழக அரசு மாநில அளவில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், புனித பாத்திமா தொடக்கப்பள்ளியில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தியது. இதில் 9ம் தேதியன்று புனித பாத்திமா தொடக்கப்பள்ளியில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் ஓலைப்பாடி தலைமை ஆசிரியர் தங்கத்தாய், சித்தளி நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றார். அதேபோல் ஆலத்தூர் ஒன்றியத்தில் திம்மூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, அல்லிநகரம் நடுநிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்றார்.

அன்று மதியம் பட்டதாரி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் வேப்பூர் வட்டாரத்தில் சிறுகுடல் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிமாலா, வ.கீரனூர் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். லெப்பைக்குடிகாடு மேற்கு நடுநிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர் ஜெயந்தி, மேட்டுக்காலிங்கராயநல்லூர் நடுநிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும், அதே லெப்பைக்குடிகாடு மேற்கு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை அனிதா, கொத்தவாசல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றனர். ஆலத்தூர் ஒன்றியத்தில் மேத்தால் பள்ளி பட்டதாரி ஆசிரியை ரவி திம்மூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். இவர்களுக்கு அன்றே சர்வர் கோளாறு காரணமாக இரவு 10 மணிக்கு தான் பதவி உயர்வு கிடைத்தது. அன்றே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 10ம் தேதி பணிநிரவல் கலந்தாய்வு நடந்தது. 11ம் தேதியன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கு முற்பகல் பணிமாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் பணிமாறுதல் பெற்றவர்களுக்கும், பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் அன்றே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஆனால் இன்று வரை பணிமாறுல் பெற்றவர்களோ, பதவி உயர்வு பெற்றவர்களோ பணியிடங்களில் சென்று சேர முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் பணி மாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணி விடுவிப்பு ஆணைகளை இதுவரை வழங்காததால் இந்த பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேர் பணிமாறுதல் பெற்றும், 7 பேர் பதவி உயர்வு பெற்றும் உள்ளனர். இந்த 11பேர்களும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் ஆணைகள் பெற்றும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததுபோல் பணி விடுவிப்பு ஆணைகள் வழங்கப்படாததால் பணி நியமன ஆணை பெற்ற இடங்களில் சேர வழியின்றி திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளரும், மாநில துணை செயலாளருமான ராஜேந்திரன் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ள கலந்தாய்வு மூலம் பணிமாறுதல், பதவி உயர்வு பெற்றவர்களை அந்தந்த பணியிடங்களில் சேர ஆணை வழங்காமல் உள்ளனர். இதனால் சம்மந்தப்பட்டவர்களின் பணப்பயன் மற்றும் முன்னுரிமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படுத்தியதை போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் விரைந்து பணிகளில் சேர ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கனிடம் கேட்டபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் பணிமாறுதல் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள் பணிகளில் சேர எந்த தடையும் இல்லை. பணி நியமன ஆணைகளை கொண்டே பணிகளில் சேரலாம், ஏன் சேராமல் உள்ளனர் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கிறேன் என்றார். மாவட்ட கல்வி அலுவலர்களும், வட்டார கல்வி அலுவலர்களும் தான் ஏதோ வெளிமாவட்ட ஆசிரியர்கள் கவுன்சிலிங் குறித்து தடையாணை பெற்ற, நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி பணி விடுவிப்பு செய்யாமல் உள்ளனர் என்று ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...