×

மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

புதுச்சேரி, ஜூலை 18:     புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ்-1) சிறப்பு துணை தேர்வெழுதிய தனி தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தங்களது தேர்வு முடிவினை, தனித்தேர்வர்கள் இன்று (18ம் தேதி) மதியம் 2 மணி முதல் தங்களது மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று `Statement of Marks HSE First Year Result - June 2019’ என தோன்றும் வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ்-1 முதலாம் ஆண்டு சிறப்பு துணை தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் புதுச்சேரி இணை இயக்குநர் அலுவலக தேர்வு பிரிவுக்கு 19, 20 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையாA அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.  விடைத்தாளின் நகல் பெறுவதற்கு கட்டணமாக, பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275, மறுகூட்டலுக்கான உயிரியல் பாடத்திற்கு மட்டும்  - ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205 செலுத்த வேண்டும். அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில் தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...