×

ஏரியில் கொட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு அபாயம்

தர்மபுரி, ஜூலை 16: தர்மபுரி அருகே பிடமனேரி ஏரியில் குப்பையை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தின் மிகப்பெரிய பஞ்சாயத்துக்களில் ஒன்றான இலக்கியம்பட்டி, தர்மபுரி நகராட்சிக்கு இணையாக மக்கள் தொகை கொண்டதாகும். இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அரசு, கலெக்டர் அலுவலகம், தனியார் அலுவலகங்கள் உள்ளன. பிடமனேரி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள், குடியிருப்பு பகுதியில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பிடமனேரி ஏரிக்கரையிலும், ஏரியிலும் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுப்புற சூழல் மாசடைவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இலக்கியம்பட்டி பஞ்சாயத்தில் பல ஆண்டுகளாக பிடமனேரி ஏரியில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மற்றும் கோழிக்கழிவுகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் நேரடியாக கலப்பதால், ஏரியை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. ஏரி முழுவதும் குப்பை நிரம்பி வழிவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, நோய் பரப்பும் கேந்திரமாக மாறியுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது. எனவே, பிடமனேரி ஏரியில் குப்பையை கொட்டாமல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா