மதகடிப்பட்டு சந்தையில் வசிக்கும் 20 நரிக்குறவர்கள் குடும்பம்

திருபுவனை, ஜூலை 16: திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் 40 குடும்பங்களுக்கு ஊறல்குட்டை பகுதியில் அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் மதகடிப்பட்டு சந்தை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.
தங்களுக்கு நிரந்தர இடம் வேண்டி சென்னை பழங்குடியினர் நலத்துறையிடம் மனு கொடுத்தனர். மேலும் புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு பெய்த மழையில் கூடாரங்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் மழையால் பாதிக்கப்பட்டனர். மழையில் நனைந்து குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருபுவனை போலீசார் நரிக்குறவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி திருபுவனையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நரிக்குறவர்கள் 20க்கும் மேற்பட்டோர் தீ குளிக்க முயன்றனர்.  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மனைப்பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியும் மனைப்பட்டா வழங்கப்படவில்லை. சந்தை பகுதியில் கூடாரம் அமைத்து வசிப்பதால் நரிக்குறவர்களுக்கும், வாரம் ஒருமுறை கடை போடும் வியாபாரிகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் வர உள்ளதால் நரிக்குறவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாரதியார் சிலைக்கு சபாநாயகர் மாலை