பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட பட்டாக்கத்தியுடன் திரிந்த 5 ரவுடிகள் கைது

புளியந்தோப்பு, ஜூலை 16: பிரபல ரவுடியை தீர்த்துக்கட்டுவதற்காக, புளியந்தோப்பு பகுதியில் பட்டாக்கத்திகளுடன் திரிந்த 5 ரவுடிகளை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். புளியந்தோப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மறைவான இடத்தில் சுற்றித் திரிந்த 5 பேர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். உடனே போலீசார், விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர்களிடம் 6 பட்டாக் கத்திகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (எ) குள்ள பிரகாஷ் (23), அருண் (22), கனகராயன் தோட்டத்தை சேர்ந்த சதீஷ் (எ) லொட்ட சதீஷ் (22), சந்துரு (23), பிரேம்குமார் (21) என்பதும், இவர்கள் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

மேலும் விசாரணையில், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூலிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விக்கி (எ) விக்னேஷ் (22) என்பவருடன் மோதல் ஏற்பட்டு, முன் விரோதம் ஏற்பட்டதால், அவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி, பட்டாக் கத்தியுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED தாம்பரம்-குண்டுமேடு இடையே மினி பஸ் இயக்க கோரி மக்கள் சாலை மறியல்