×

நகராட்சியில் குப்பை சேகரிக்க வீடு தேடி வரும் பணியாளர்கள்

குமாரபாளையம், ஜூன் 27:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகளும் சுமார் 1.25 லட்சம் மக்களும் வசிக்கின்றனர். நகராட்சியில் நாள்தோறும் சுமார் 30 டன் குப்பைகள் வெளியாகின்றன. குடியிருப்பு பகுதியில் டம்பர் பிளேசர் எனப்படும் தகர பெட்டிகள் வைக்கப்பட்டு, அதில் சேறும் குப்பைகளை லாரிகள் மூலம் எடுத்துச்சென்று வந்தனர்.வீடுகளில் வெளியாகும் குப்பைகளை ஒட்டுமொத்தமாக டம்பர் பிளேசர்களில் கொட்டுவதால் அதில் உள்ள பாலித்தீன், காய்கறி, காகிதம், இரும்பு உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை பிரித்து மறு சுழற்சி செய்ய முடியவில்லை. மக்காத பாலித்தீன், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரிப்பதில் துப்புரவு பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து நகராட்சி சார்பில் ஒவ்வொரு வீடுகளுக்கும் இரண்டு விதமான பக்கெட்டுகளை கொடுத்து, அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வாங்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.இதன்படி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுதோறும் சென்று குப்பைகளை தரம்பிரித்து தனித்தனியாக வாங்கி, அதற்கான கேண்களில் சேகரித்து வாகனங்களுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெறுகிறது. இதனால் நகராட்சியில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பழைய டம்பர் பிளேசர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜகாங்கிர்பாஷா கூறுகையில், நகராட்சி அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் நேரில் வந்து குப்பைகளை தரம்பிரித்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த டம்பர் பிளேஸர்கள் அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். இதனால் குமாரபாளையம் குப்பையில்லாத சுகாதாரமான நகரமாக மாறும் என்றார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி