×

ஆக்கிரமிப்பில் உள்ள பழமையான குடிநீர் கிணறுகளை தூர்வாரி மழைநீர் சேகரிப்புக்கு பயன்படுத்த கோரிக்கை

ஆண்டிபட்டி, ஜூன் 27: ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற கிராமங்களில் குடிநீருக்காக வெட்டப்பட்ட பழமையான குடிநீர் கிணறுகளை மீட்டு தூர் வாரி மழைநீர் சேகரிப்பு கிணறாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றி பாலக்கோம்பை, பழையகோட்டை, தெப்பம்பட்டி, ராஜதானி, சித்தார்பட்டி, மரிக்குண்டு, சுப்புலாபுரம், மொட்டனூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி, தர்மத்துபட்டி,சுப்புலாபுரம் என 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.இவர்களின் குடிநீர் தேவைக்காக அரசு கடந்த 1956ம் ஆண்டு கிராமங்கள் தோறும் கிணறுகள் வெட்டப்பட்டு குடிநீர் வழங்கியுள்ளனர். ஆனால் கால போக்கில் பருவநிலை மாற்றம் காரணத்தினால் நீர்நிலைகள் வறண்டதால் கிணறுகளும் வறண்டது. இதனால் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆழ்துளை கிணறுகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் வழங்கி வருகின்றனர். ஆனாலும் போதிய அளவு குடிநீர் மக்களுக்கு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டு வருவதால் அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனை சமாளிக்க அரசு குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த நீர் நிலைகள் மற்றும் கிணறுகளை மீட்டு தூர்வாரி தென்மேற்கு பருவமழை நீரை சேமிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆண்டிபட்டி பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீர் தட்டுப்பாடும் கடுமையாக உள்ளது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. பொதுமக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று செய்தால் உடனே அரசு அதிகாரிகள் கண்துடைப்பிற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கின்றனர். ஏற்கனவே வறண்டு உள்ள நிலத்தில் தண்ணீர் எப்படி இருக்கும் என்பது தெரிந்தும் இதுபோன்ற தவறுகள் செய்கின்றனர். ஆகையால் பழமையான கிணறு மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க முடியும்’ என்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களையும் வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள நீர் நிலைகளையும், கிணறுகளை மீட்டு தூர்வாரி மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி