×

கருகி வரும் அவலம் திருமங்கலத்தில் குடிநீர் திருட பயன்படுத்திய மின்மோட்டார்கள் பறிமுதல்

திருமங்கலம், ஜூன் 27: திருமங்கலம் நகரில் குழாயில் மின்மோட்டார் வைத்து குடிநீரை எடுத்த 12 வீடுகளில் மோட்டார்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.திருமங்கலம் நகராட்சியில் காவிரி மற்றும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகம் எங்கும் தண்ணீர் பிரச்னை எழுந்துள்ள நிலையில் திருமங்கலம் நகரில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படியும், குழாய்களில் நேரடியாக மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுக்க கூடாது எனவும் நகராட்சி அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நகரிலுள்ள 27 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதை கண்காணிக்க தனிக்குழுவை ஆணையாளர் ஜெயராமராஜா அமைத்துள்ளார். நேற்று நகராட்சி இன்ஜினியர் சக்திவேல், ஓவர்சியர்ஸ் பட்டுராஜன், பிட்டர் பாண்டி அடங்கிய குழுவினர் நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் கண்காணித்தனர். இதில் நேற்று குறிஞ்சிநகர், முகமதுஷாபுரம் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் 12 வீடுகளில் நேரடியாக குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பது தெரியவந்தது. நகராட்சி தனிக்குழுவினர் உடனடியாக இந்த 12 மின்மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோல் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். நகராட்சி பகுதியில் தினசரி எங்களின் நடவடிக்கை தொடரும் என்றனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...