×

பென்னாகரம் அருகே கூடுதல் பஸ் இயக்கிடகோரி மாணவர்கள் மறியல்

பென்னாகரம், ஜூன் 26: பென்னாகரம் அருகே கூடுதல் பஸ்களை இயக்கக்கோரி மாணவர்கள் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தர்மபுரியில் இருந்து பென்னாகரம் அடுத்த சின்னமலைக்கு தினமும் காலை நேரத்தில் 5சி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் பெரும்பாலை, சின்னம்பள்ளி, அரக்காசனஅள்ளி வழியாக சின்னமலைக்கு செல்லும். அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தர்மபுரியில் இருந்து சின்னமலைக்கு இயக்கப்படும் பஸ் மீண்டும் அங்கிருந்து 7.30 முணிக்கு தர்மபுரிக்கு இயக்கப்படுகிறது.  இதனால் காலை நேரங்களில் கூலி வேலை, அலுவலக பணி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தர்மபுரிக்கு வரும் அனைவரும் இந்த பஸ்சில் தான் பயணிப்பர். இதனால் பஸ்களில் தினமும் காலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படும். எனவே இப்பகுதியில் காலை நேரத்தில் கூடுதலாக ஒரு பேருந்தை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சின்னமலையில் இருந்து நேற்று காலை தர்மபுரிக்கு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அரக்காசனஅள்ளி அருகே வந்த பேருந்தை 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் திடீரென சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாலை போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை நேரங்களில் எங்களுக்கு கூடுதல் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா