×

மொரப்பூரில் குடிநீர் கேட்டு அரிசி, பருப்பு, காய்கறிகளுடன் நூதன போராட்டம்

அரூர், ஜூன் 26: மொரப்பூரில், குடிநீர் கேட்டு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குடிநீர் சப்ளையை சீர்செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம்(39) உள்பட 100க்கும் மேற்பட்டோர் சந்தைமேடு பஸ் ஸ்டாப் பகுதியில் திரண்டனர். பின்னர், அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், ஜெயராமன் மற்றும் மொரப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது: அண்ணல் நகர் மற்றும் ராசலாம்பட்டி பகுதியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால், குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் கூட தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டோம். இப்பகுதியைச் சேர்ந்த நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் பணம் வாங்கிக் கொண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீரை விற்பனை செய்து வருகிறார். இதனால், அப்பாவி மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, குடிநீர் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி எங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி கூறினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா