×

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தர்மபுரி, ஜூன் 26: தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பழகுநர் உரிமம் பெற பல நாட்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டூவீலர், கார், லாரி மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட பழகுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் 4 அல்லது 5 நாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 60 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுவதால் தொலை தூரத்தில் இருந்து பழகுநர் உரிம் பெற வருபவர்கள் தவிப்பிற்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலக்கோட்டில் உள்ள இணை அலுவலகத்தில் நாளொன்றுக்கு 120 பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. அதேபோல், அரூர் இணை அலுவலகத்தில் நாளொன்றுக்கு 40 பழகுநர் உரிமங்கள் வழங்கப்படுகிறது. அதேவேளையில், மாவட்ட தலைநகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையில் பழகுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கப்படுகிறது. ஆனால், குறைவான எண்ணிக்கையிலே வழங்கப்படுகிறது. இதனால், உரிமம் பெற வரும் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். மேலும், தேவையற்ற அலைச்சலும் கால தாமதமும் ஏற்படுகிறது. அன்றாட வேலைகளில் மூழ்கி ஓட்டுனர் உரிமம் பெற நேரம் ஒதுக்க முடியாமல் விட்டு விடுகின்றனர். இதனால், சாலை போக்குவரத்து விதிமீறல் நடக்கிறது. இது சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் இத்தகைய காலதாமதம் ஏற்படுகிறது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் மூன்றில் ஒரு இடம் காலியாக உள்ளது.

 மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் சேர்த்து பொறுப்பேற்று பணியாற்றுவதால் இதுபோன்ற கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அலுவலகத்தில் நேரடியாக உரிமம் கேட்டு வருபவர்களிடம் விண்ணப்பத்தை வாங்குவதில்லை. ஆன்-லைனில் விண்ணப்பிக்கச் சொல்லி தனியார் இணையதள மையங்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். அங்கு தேவையற்ற சேவைக்கட்டணம்  செலுத்த வேண்டியுள்ளது.
புதிய மோட்டார் வாகனப்பதிவு, பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், பொதுப்பணி வில்லை பெறுதல், தகுதி சான்று மற்றும் மோட்டார் வாகன ஆய்வு அபராதம் ஆகியவற்றுக்காக ஆன்லைனில் பணம் செலுத்த தனியார் இணையதள மையங்களுக்கு அனுப்பப்படுவதால் தேவையற்ற அலைச்சல் மற்றும் பணவிரயம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும், உரிமம் கேட்டு விண்ணப்பிக்க வரும் அனைவருக்கும் அதேநாளில் விண்ணப்பம் பெற்றுக்கொண்டு உரிமம் வழங்கவேண்டும். ஆன்-லைனில் செலுத்தப்படும் அனைத்து வகையான கட்டணங்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலேயே
வசூலிக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா