×

காரிமங்கலம் சந்தை திடலில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீர்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

காரிமங்கலம், ஜூன் 26: காரிமங்கலம் சந்தை திடலில், அபாயகரமான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தை திடலில், வாரந்தோறும் சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு காரிமங்கலம் மட்டுமின்றி தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், சந்தையின் நடுவே அமைந்துள்ள ஒரு சாய்ந்த மின் கம்பத்தில் இருந்து கம்பிகள் மிகவும் தாழ்வாக சாலையைக் கடந்து எதிரே செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின் கம்பிகளின் கீழே வியாபாரிகள் கூடாரங்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில், சாலை வழியாக காய்கறி ஏற்றி வரும் வண்டிகள், தீவனங்களை ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது, மின் கம்பியில் உரசி, கூடாரங்கள் மேல் நெருப்பு பட்டு தீ விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பெரும் விபத்து நேரிடும் முன்பாக தாழ்வாக செல்லும் மின்கம்பிளை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா