×

34 கிராமங்கள் பயனடையும் வகையில் ₹2.95 கோடி மதிப்பில் தடுப்பணை புனரமைப்பு

தர்மபுரி, ஜூன் 21: நல்லம்பள்ளி அருகே 6 ஏரி, 34 கிராமங்கள் பயன்அடையும் வகையில், ₹2.95 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, பாளையம்புதூர் கிராமத்தின் அருகே காட்டோடையின் குறுக்கே மாரியம்மன் கோயில்பள்ளம் உள்ளது. இந்த பகுதியில் மழைக்காலத்தில் தொப்பூர் வனப்பகுதியில் இருந்து வரும் நீரை தேக்கி வைக்க தடுப்பணை இருந்தது.

ஒருமுறை வெள்ளம் ஏற்பட்டதில், இந்த தடுப்பணை சேதமானது. அதன்பின்னர், மழைநீர் தேங்குவதில்லை. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ₹2.95 கோடி மதிப்பீட்டில் இந்த தடுப்பணையை புனரமைக்கும் பணியை, கடந்த 5 மாதத்திற்கு முன் தொடங்கியது. இந்நிலையில், இந்த தடுப்பணையை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் மெய்யழகன், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:

காட்டோடையின் குறுக்கே, மாரியம்மன் கோயில்பள்ளத்தில் ₹2.95 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை புனரமைக்கும் பணிக்கு, கடந்த 11.01.2019ம் தேதி  பூமி பூஜை நடந்தது. தற்போது பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 1963ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தர்மபுரி பொதுப்பணித்துறை - நீர்வள ஆதார அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து செல்லும் கால்வாய் 3.65 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் திம்மலகுந்தி ஏரி, நாயக்கன் ஏரி, புது ஏரி, பக்கிரி ஏரி, சின்ன பெரமன் ஏரி மற்றும் ஏலகிரி பெரிய ஏரி ஆகிய 6 ஏரிகளுக்கு, நீர் வழங்குகிறது. இதன் மூலம் 157 ஹெக்டேர் (388 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இத்திட்டத்தில், நல்லம்பள்ளி வட்டத்தை சார்ந்த பாகலஅள்ளி, பாளையம்புதூர், டொக்குபோதனஅள்ளி ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏலகிரி, தாதநாயக்கன்பட்டி, தண்டுகாரம்பட்டி, கொத்தமல்லிகாரன்கொட்டாய், தொம்பரகாம்பட்டி உள்ளிட்ட 34 கிராமங்கள் பயன் பெறுகின்றன.

குடிமராமத்து திட்டத்தின் கீழ், கடந்த 2016-2017 ஆண்டில் ஆலங்கரை ஏரி, அரூர் பெரிய ஏரி, கொப்பகரைபள்ளம் ஏரி, தலாவ் ஏரி, திண்டல் ஏரி, அடிலம் ஏரி உள்ளிட்ட 21 ஏரிகளில், ₹1.56 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஏரிகளில் கூடுதலாக சுமார் 0.12 மி.க.மீ தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2017-2018ம் ஆண்டில் லளிகம் ஏரி, மாதேமங்கலம் ஏரி, ஜெர்தலாவ் ஏரி, தாமரை ஏரி, பைசுஅள்ளி ஏரி உள்ளிட்ட 10 ஏரிகளில் ₹327.35 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் கூடுதலாக சுமார் 0.11 மி.க.மீ தண்ணீர் தேக்கி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஏரிகள், குளங்கள் குடிமராமத்து பணி செய்யப்பட்டுள்ளதால், மழைநீர் வீணாகாமல் முழுமையாக சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர் அதிகரிக்கவும் முடியும். விவசாய தேவைக்கும், பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கும், கால்நடைகள் மற்றும் இதர தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் மோகன பிரியா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : villages ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்