×

திருத்தணியில் நிலவும் குடிநீர் பிரச்னையால் தண்ணீர் டிரம்களுக்கு கிராக்கி

திருத்தணி, ஜூன் 21: திருத்தணி நகராட்சியில் குடிநீர் பிரச்னை காரணமாக தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளும் டிரம்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையோ இரு மடங்காக உயர்ந்துள்ளது. திருத்தணியில் உள்ள 21 வார்டுகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் 26 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 47 ஆழ்துளை கிணறுகள் மூலம் தெரு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு  பருவ மழை பொய்த்துவிட்டதால் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் டிராக்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றது. அதாவது ஒரு வீட்டிற்கு, இரண்டு பிளாஸ்டிக் தண்ணீர் டிரம் வீதம் சில  மாதங்களாக வீடுதோறும் வினியோகம் செய்து வருகிறது. இதனால் வீடுகளில் பிளாஸ்டிக் தண்ணீர் டிரம் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு டிரம் விலை ₹500க்கு விற்கப்பட்டது. தற்போது இரு மடங்காக அதிகரித்து ₹1,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்தாலும், மக்கள் குடிநீர் பிடிப்பதற்கு தண்ணீர் டிரம்கள் வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. திருத்தணியில் தண்ணீர் டிரம்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியும், பொதுமக்கள் கவலையும் அடைந்துள்ளனர். மேலும் தண்ணீர் தேவையை கருதி அதிக விலை கொடுத்து டிரம்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : Corridor ,
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...