×

கடும் தண்ணீர் பற்றாக்குறை அம்மா குடிநீர் விற்பனையகம் மூடல்

சிதம்பரம், ஜூன் 19: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் இயங்கி வந்த அம்மா குடிநீர் விற்பனையகமும் மூடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது. மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை உருவாகி உள்ளது. கோடை வெயில் கடுமையாக வெளுத்து வாங்குவதால் மக்கள் தண்ணீரை தேடி அலைகின்றனர். பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில் ஒன்று ரூ.10க்கு விற்கப்பட்டது. இதனை ஏராளமான பயணிகள் வாங்கி தாகத்தை தணித்து வந்தனர்.இந்நிலையில் சென்னையில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுவதால் அம்மா குடிநீர் பாட்டில்கள் வருவது தடைபட்டுள்ளது. இதனால் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனையகம் கடந்த சில தினங்களாக மூடப்பட்டுள்ளது. மற்ற மினரல் வாட்டர் பாட்டில்கள் ரூ.20க்கு விற்கப்படுவதால் அதனை வாங்க மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகின்றனர். ஆகையால் அரசு குறைந்த விலையில் மக்களுக்கு குடிநீர் பாட்டில்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய்களில் கசிவு:
சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு சாலையில் பல இடங்களில் தண்ணீர் வீணாக ஓடுகிறது. சிதம்பரம் அருகே உள்ள கிள்ளைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அண்ணாமலைநகர் முத்தையாநகர், மீதிகுடி, கோவிலாம்பூண்டி, மீதிகுடி வழியாக கிள்ளைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் செல்கிறது. இதில் மீதிகுடி, கோவிலாம்பூண்டி, அனுவம்பட்டு ஆகிய பகுதிகளில் 8 இடங்களில் குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடுகிறது. முத்தையா நகரிலிருந்து கீழ்அனுவம்பட்டு வரையுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கே 8 இடங்களில் குடிநீர் வீணாகிறது என்றால் இதன் முழு நீளத்திற்கு எவ்வளவு நீர் வீணாகிறதோ என மக்கள் வேதனையுறுகின்றனர்.ஆகையால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடும் வறட்சியும், வெயிலும் நீடித்து வரும் நிலையில் கடலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க பெருநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடலூரின் பல்வேறு பகுதிகளில் சிலர், பிரதான குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் மூலம் முறைகேடாக அதிகப்படியான குடிநீரை உறிஞ்சி தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இதுபோல் சிலரின் சுயநல செயல்பாடுகளால் அப்பகுதியில் உள்ள பிற பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்மோட்டர்கள் மூலம் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.இதுகுறித்து ஏராளமான புகார்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த கடலூர் பெருநகராட்சி நிர்வாகம் சட்டவிரோத மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஆணையர் அரவிந்த்ஜோதி உத்தரவின் பேரில் நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தியதில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்நிலையில் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலை, வண்டிப்பாளையம், மெயின் ரோடு, புதுப்பாளையம் பாலாஜி நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள், லாட்ஜ்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 15 மின்மோட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகள் நகராட்சி பகுதிகள் அனைத்திலும் தொடரும் என உதவி பொறியாளர் தெரிவித்தார்.

Tags : water shortage closures ,drinking water shop ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை