×

இன்று உலக ரத்த கொடையாளர் தினம் மதுரை ஜிஹெச்சில் ஆண்டுக்கு 25 ஆயிரம் யூனிட் சேமிப்பு 60 ஆயிரம் பேர் பயன் பெறுகிறார்கள்

மதுரை, ஜூன் 14: உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் 2014ம் ஆண்டு முதல் ஜூன் 14ம் தேதி ரத்த கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தோர், உயிர் காக்கும் சிகிச்சை பெறுவோர், அவசர அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் நோயாளிக்கு தேவையான ரத்த வகைகள் உடனடியாக கொடுக்கும் நோக்கத்துடன் ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு தேவையான ரத்தம் தங்கு தடையின்றி கிடைக்க வழிசெய்யும் வகையில், உலக ரத்த கொடையாளர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 2வது பெரிய ரத்த வங்கியாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் யூனிட் ரத்தம் பெறப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு வகையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறுகின்றனர். மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டவற்றில் முகாம் நடத்தி, தேவையான ரத்தத்தை அரசு மருத்துவமனை பெறுவதில் அதிக முன்னுரிமை காட்டி வருகிறது.

மதுரை செஞ்சிலுவை சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘ரத்த அணுக்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, புதிய ரத்த பிரிவுகளை கண்டறிந்த ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டெய்னரை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளன்று உலக ரத்த தான கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 1960ம் ஆண்டு முதல் ரத்த தானத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முகாம் நடத்தியும் ரத்தங்கள் சேகரிக்கப்பட்டு வந்தாலும், தற்போது இவற்றை அதிகரிக்க வேண்டியுள்ளது. ‘மெகா கேம்ப்’ ஏற்படுத்தி அதிகப்படியான ரத்தத்தை முகாமிலும் பெற்று வைப்பதற்கு ஸ்டோரேஜ் இல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி அங்கும் போதிய வசதி இல்லாமல் ரத்தத்தை பயன்படுத்த முடியாத அவல நிலையும் சில நேரங்களில் ஏற்படுகிறது. இதுபோன்ற வசதி குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்’ என்றார்.

125 முறை ரத்த தானம்:
செஞ்சிலுவை சங்க அவைத்தலைவர் ஜோஸ் கூறுகையில், ‘பலரும் சேவை மனப்பான்மையுடன் தன்னார்வத்தோடு ரத்த தானம் செய்து வருகின்றனர். இதனால் பல உயிர்களை காக்க உதவியாக இருக்கிறது. நான் மட்டுமே 125 முறைக்கு மேலாக ரத்த தானம் வழங்கி இருக்கிறேன். ரத்ததானம் அளிப்பதை இளைய தலைமுறையினர்  தங்களது கடமையாக கொள்ள வேண்டும். 18 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்ட 45  கிலோ எடையுள்ள எவரும் தங்களது ரத்தத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தானமாக  வழங்கலாம்’ என்றார்.

Tags : World Blood Donor Day ,Madurai JHC ,
× RELATED மிகவும் உன்னதமான செயல் ரத்ததானம்...