×

மிகவும் உன்னதமான செயல் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

அரியலூர், ஜூன் 15: அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாமை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று துவக்கி வைத்தார்.

பின்னரல் கலெக்டர் தெரிவித்ததாவது:
உயிர் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரமான பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தம் சார் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து ரத்ததானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் குருதி கொடையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் நாள் உலக குருதி கொடையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினம் இந்த ஆண்டின் கருப்பொருளாக “தொடர்ந்து குருதி, பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்’’ என்ற பொருளை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது.

நோயாளிகளுக்கு ரத்த தானம் மிகவும் அவசியமாகும். ரத்ததானம் செய்வதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ரத்ததானம் செய்தல் மிகவும் உன்னதமான செயலாகும். எனவே இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மருத்துவர்கள், ரத்ததான தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து அனைத்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல இன்னுயிர்களை காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் எடுக்கப்பட்டது. மேலும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் குருதி கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதேபோன்று குருதிக் கொடை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கியும், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இரத்ததான விழிப்புணர்வு குறித்த கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் குறித்து காட்சிப்படுத்தபட்டிருந்த மாணவர்களின் படைப்புகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

நிகழ்வில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், துணை முதல்வர் மரு.சித்ரா, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ரமேஷ், இருக்கை மருத்துவ அலுவலர் மரு.குழந்தைவேலு, நோயியல் துறை தலைவர் மரு.பிரேமலதா, குருதி வங்கி மருத்துவ அலுவலர் மரு.பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர்(பொ) சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மிகவும் உன்னதமான செயல் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,World Blood Donor Day ,Ariyalur Government Medical ,College Hospital ,Ariyalur District ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...