படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

பழநி, ஜூன் 14: படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டுமென தமாகா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநியில் வட்டார தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சுந்தர், வட்டார நிர்வாகிகள் தங்கவேல், சுப்பிரணமி, சண்முகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் பொன்மாணிக்கவேலின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசும், நீதிமன்றமும் உறுதுணையாக இருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் பாரபட்சமின்றி உடனடியாக உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

பழநியில் இருந்து திருப்பதி, ராமேஷ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட விவசாய அணித் தலைவர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண...