×

பத்திரம் வழங்க ரூ5 ஆயிரம் லஞ்சம் குடிசைமாற்று வாரிய அதிகாரி கைது

சென்னை: சென்னை கே.கே.நகரில் குடிசைமாற்று வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. வீடு இல்லாதவர்கள் மற்றும் ஏரிக்கரையோரம் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டித் தருவது, வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்வது சம்பந்தமான ஆவணங்கள் வழங்குவது போன்ற பணிகள் இந்த அலுவலகத்தில் செய்யப்படுகிறது. இந்நிலையில் சேலையூர், கற்பகம் நகரை சேர்ந்த சிவாஜி என்பவர் நேற்று தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு பத்திரம் பெறுவதற்கு கே.கே.நகர் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் லெனின் (50) என்பவர், உடனடியாக பத்திரம் வாங்கி தர வேண்டுமானால் ரூ5 ஆயிரம் கொடுக்க வேண்டும், என்றுள்ளார். அப்போது, சிவாஜி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஏடிஎம்மில் பணத்தை எடுத்து வந்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, வெளியில் வந்த சிவாஜி இளநிலை உதவியாளர் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கே.கே.நகர் குடிசைமாற்று வாரிய அலுவலகத்திற்கு விரைந்து வந்து, சிவாஜியிடம் ராசாயனம் தடவிய ரூ5 ஆயிரத்தை கொடுத்து, லெனினிடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். அதன்படி சிவாஜி அவரிடம் சென்று பணத்தை கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவர் அலுவலகத்தை சோதனை செய்த போது கணக்கில் இல்லாத ரூ1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bribe cotton board officer ,
× RELATED பத்திரம் வழங்க ரூ5 ஆயிரம் லஞ்சம் குடிசைமாற்று வாரிய அதிகாரி கைது