கத்திரி வெயில் முடிந்தும் நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி

புதுச்சேரி, ஜூன் 12: புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் தினமும் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. அனல்காற்றுடன் வெயில் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். புதுச்சேரியில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப் படுகிறது. கோடை வெயில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் நிலவும். ஆனால் இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் உக்கிரம் ஆரம்பித்து விட்டது. அப்போது இருந்தே மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டது. பலர் தங்களின் முக்கியமான பணிகளை கூட தள்ளிவைத்து விட்டு, வீட்டில் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் வெயிலின் கோரம் வழக்கத்தை விட அதிகரித்தது. மக்கள் வெயிலில் நடமாட முடியாத அளவுக்கு சுட்டெரித்தது. இதனால் அக்னி வெயில் எப்போது முடியுமோ என மக்கள் எதிர்பார்க்க நேரிட்டது. தொடர்ந்து 26 நாட்கள் மக்களை வறுத்தெடுத்த அக்னி வெயில் கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இதோடு வெயிலின் கொடுரம் நீங்கியது என மகிழ்ந்த மக்களை மீண்டும் வெயில் பயமுறுத்த தொடங்கியுள்ளது. கத்திரி முடிந்து 13 நாட்கள் ஆகியும் கோடை வெயில் குறைந்தபாடில்லை. மேலும், கத்திரி காலத்தை காட்டிலும் இப்போது தான் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. புதுச்சேரியில் கடந்தாண்டும் அக்னி முடிந்த பிறகு தான் வெயிலின்தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்தாண்டு 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்தாண்டின் அதிகபட்ச வெயிலாக கடந்த 8ம் தேதி 104.18 டிகிரிக்கு அடித்தது. அதே அளவு அடுத்த நாளான 9ம் தேதியும் நீடித்தது. 10ம் தேதி 100 டிகிரி வெயில் அடித்தது.

3 நாட்கள் அனல் காற்று இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் அனல் காற்றுடன் உக்கிர வெயில் நீடித்து வருகிறது. நேற்று அனல் காற்றுடன் 104 டிகிரிக்கு வெயில் வறுத்தெடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்றும் (12ம் தேதி) அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. கோடை வெயில் நீடித்து வருவதால் புதுச்சேரியில் ஏரி, குளங்கள் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாய தொழிலும் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டிருப்பதை போல புதுச்சேரியிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியை போல அருகில் உள்ள தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் பகுதிகளிலும் தினமும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று, விழுப்புரத்தில் 107 டிகிரியும், கடலூரில் 104.9 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது.

Tags :
× RELATED வெப்ப சலனத்தால் மழை பெய்யும்