×

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட முன்னாள் அமைச்சர்

தர்மபுரி, மே 25: தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும், 13 பேர் டெபாசிட் இழந்தனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு துவங்கியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு இப்பணி நிறைவடைந்தது.

அதன் பின்னரே வெற்றி வேட்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வமான சான்றிதழ்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 12 லட்சத்து 23 ஆயிரத்து 205 பேர் வாக்களித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தார் (வாக்கு வித்தியாசம்-70,753). முன்னாள் அமைச்சரும், அமமுக வேட்பாளருமான பழனியப்பன், 53 ஆயிரத்து 655 வாக்குகளுடன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ருக்மணி தேவி 19,674 வாக்குகள் பெற்று 4ம் இடத்தையும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராஜசேகர் 15,614 வாக்குகள் பெற்று 5வது இடத்தையும் பிடித்தனர். இந்த தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தோல்வியடைந்த டாக்டர் அன்புமணி ராமதாசை தவிர, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Tags : minister ,Dharmapuri ,constituency ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி