×

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசம் அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்எல்ஏக்கள் அதிர்ச்சி

மதுரை, மே 25: திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்திருப்பதை கண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வெங்கடேசனும், அதிமுக சார்பில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா மகன் ராஜ்சத்யன் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

இருவருக்கும் இடையேதான் கடுமையான போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே வெங்கடேசன் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் பின்தங்கிய நிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில், வெங்கடேசன் 4,47,075 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். ராஜ்சத்யன்(அதிமுக) 3,07,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட முக்கிய சட்டமன்ற தொகுதியான மதுரை மேற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதி. இதில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 82,022 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளர் 55,208 ஓட்டுகள் பெற்றார். இத்தொகுதியில் மட்டும் 26 ஆயிரத்து 814 ஓட்டுகள் கூடுதலாக கம்யூ. வேட்பாளர் பெற்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி பெற்றதை விட 2 மடங்கு கூடுதலாக திமுக கூட்டணிக்கு வாக்கு கிடைத்திருப்பதை கண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சட்டமன்ற தேர்தலி–்ல இத்தொகுதியில் நிற்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபடத்துவங்கியுள்ளார்.

அதிமுக வேட்பாளரின் தந்தையின் தொகுதியான மதுரை வடகில் மகன் பெற்ற வாக்கைவிட 28, 908 வாக்குகளை கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிகம் பெற்றிருப்பதை கண்டு ராஜன்செல்லப்பா அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதிமுகவின் தொகுதியான மேலூரில் அதிமுக வேட்பாளரை விட கம்யூனிஸ்ட் வேட்பாளர் 24,831 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதேபோன்று மதுரை தெற்கில் அதிமுக வேட்பாளரை விட கம்யூனிஸ்ட் வேட்பாளர் 423 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.

மதுரை அதிமுகவின் கோட்டை என அமைச்சர் செல்லூர் ராஜூவும், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா அடிக்கடி கூறுவார்கள். ஆனால்
இந்த தேர்தலில் அவர்களுடைய தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பல ஆயிரக்கணக்கான ஓட்டுகள் அதிகளவில் பெற்றிருப்பது அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அதிமுக எம்எல்ஏக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திமுக தொகுதிகளில் அதிக லீடிங்
மாவட்டத்தில் திமுகவின் தொகுதியான மதுரை கிழக்கில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 97,859 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 63,059 ஓட்டுகள் பெற்றார். இத்தொகுதியில் அதிமுகவை விட கம்யூனிஸ்ட் வேட்பாளர் 34,800 ஓட்டுகள் அதிகம் பெற்றார். அதே போன்று திமுகவின் மற்றொரு தொகுதியான மதுரை மத்தியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 72,010 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளர் 40,667 ஓட்டுகளும் பெற்றனர். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட கம்யூனிஸ்ட் வேட்பாளர் 31,343 ஓட்டுகள் அதிகம் பெற்றார். திமுகவின் தொகுதிகளில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சராசரியாக 30 ஆயிரம் ஓட்டுகளை கூடுதாலக பெற்றார்.

Tags : Velupuram Seloor Raju ,Madurai ,Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...