நாமகிரிப்பேட்டையில் சாமந்தி பூ விளைச்சல் அமோகம்

நாமகிரிப்பேட்டை, மே 23:  நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் மார்க்கெட்டில் விலை சரிந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நாமகிரிப்பேட்டை, மெட்டால்லா, செல்லிப்பாளையம், ஆயில்பட்டி, பிலிப்பாக்குட்டை, திம்மநாயக்கன்பட்டி, வேப்பிலைக்குட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் சாமந்தி பூ  சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் சாமந்தி பூக்களை சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது மார்க்கெட்டில் சாமந்தி பூக்களின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஆனந்த்  கூறியதாவது:
சாமந்தி பூ ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ₹60 ஆயிரம் முதல் ₹70 ஆயிரம்  வரை செலவாகிறது. நாற்று நட்டு 5 மாதத்தில் செடியில் பூக்கள் அறுவடைக்கு தயாராகும். ஒரு ஏக்கரில் உள்ள செடியில் நாளொன்றுக்கு 400 முதல் 450 கிலோ வரை சாமந்திபூவை, தொடர்ந்து 3  மாதத்திற்கு அறுவடை செய்யலாம். தற்போது சாமந்தி பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால், சேலம் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் ₹60க்கு விற்பனையான ஒரு கிலோ சாமந்தி பூ, தற்போது ₹20க்கு தான் விற்பனை ஆகிறது. தவிர, பூ மார்க்கெட்டுக்கு 10 சதவீதம்  கமிஷன், வண்டி வாடகை, பூ பறிக்க ஆட்கூலி என ஒரு கிலோ சாமந்தி பூவுக்கு ₹12  வரை கொடுக்க வேண்டியுள்ளதால் விலை கட்டுப்படியாவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED நாமக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிப்பு