×

புற சிகிச்சை மையம் துவங்க ஆலோசனை

காரைக்கால், மே 23:    காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி மையத்தில் புற சிகிச்சை மையம் துவங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட அரசு பொது மருத்துவமனை கோமாநிலைக்கு தள்ளப்பட்டதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையுடன், புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் தற்காலிக இடத்தில் ஜிப்மர் மருத்துவ சேவை கிளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து, கடற்கரை சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தற்காலிக இடத்தில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. காரைக்கால் ஜிப்மர் கிளைக்கு நிரந்தர கட்டிடம் கட்டும் நோக்கில் காரைக்கால் கோவில்பத்து மற்றும் பிள்ளை தெருவாசலுக்கு செல்லும் பைபாஸ் சாலை அருகே புதுச்சேரி அரசு 80 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. முதல் கட்டமாக ரூ.480 கோடியில் கட்டடங்கள் கட்டப்படும், அடுத்தகட்டமாக கட்டுமானம் நடைபெறும், அதுவரை, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை ஜிப்மர் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் ரூ.30 கோடியில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிரந்தர கட்டிடம் கட்டும் பணியும், மருத்துவமனையை மேம்படுத்தும் பணியும் இதுவரை நடைபெறவில்லை. புதுச்சேரி அரம், ஜிப்மர் நிர்வாகமும் இதை கண்டுகொள்ளவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நேற்று முன்தினம் காரைக்கால் வந்தார். தொடர்ந்து, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள ஜிப்மர் கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் கிளை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், புதுச்சேரி புறப்பட்டு சென்றார். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன், காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் புற சிகிச்சை மையம் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக காரைக்கால் ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : treatment center ,
× RELATED எழும்பூர் குழந்தைகள் நல...