×

கட்டுப்பாட்டு கருவி இயங்காவிட்டால் விவிபேடில் பதிவான வாக்கு எண்ணப்படும்

நாமக்கல், மே 21: வாக்கு எண்ணிக்கையின்போது, கட்டுப்பாட்டு கருவி இயங்காவிட்டால் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(23ம் தேதி) திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து பேசியதாவது: வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்ட 5,391 அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டதில் இதுவரை 3,515 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. தபால் வாக்கு எண்ணும் பணி தனியாக நடைபெறும். வேட்பாளர்களின் வெற்றி மிகக்குறைந்த வித்தியாசத்தில் இருந்தால், தபால் வாக்குகள் மீண்டும் சரிபார்க்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் 1 மேற்பார்வையாளர், 1 உதவியாளர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள். கட்டுப்பாட்டு கருவி இயங்கவில்லை என்றால் அதற்கு பதிலாக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். விவிபேட் கருவியில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்காக சட்டமன்ற வாரியாக தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு எதிரில் வேட்பாளர்களின் முகவர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று வாரியாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்து, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைப்பார்கள். அதனடிப்படையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் சரிபார்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 விவிபேட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பதிவாகியுள்ள வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டு, கட்டுப்பாட்டு கருவியில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கடைசி சுற்று வரை எண்ணப்பட்ட பிறகே விவிபேட் இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வேட்பாளர்களின் முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக அனுமதி அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,217 முகவர்களுக்கு அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப்கலெக்டர் கிராந்தி குமார் பதி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் மணிராஜ், மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி