×

விருதுநகரில் முத்திரையிடப்படாத 12 தராசுகள் பறிமுதல்

விருதுநகர், மே 19: விருதுநகரில் உள்ள மீன்மார்க்கெட், இறைச்சிக் கடைகள், பஸ்நிலைய கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகளில், எடை குறைவாக விற்பனை செய்வதாக தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமையில், விருதுநகர் துணை ஆய்வாளர் கார்த்திகேயன், சிவகாசி துணை ஆய்வாளர் முத்து முன்னிலையில், உதவி ஆய்வாளர்கள் குழுவினர், நகரில் உள்ள மீன்மார்க்கெட், இறைச்சிக் கடைகள், பஸ்நிலைய கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் முத்திரையிடப்படாத 9 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள், 6 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறுகையில், வணிகர்கள் பயன்படுத்தும் தராசுகளை, உரிய முத்திரை ஆய்வாளர்களிடம் கொண்டு வந்து பரிசீலனை செய்து, முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும்.
முத்திரை ஆய்வாளர்கள் வழங்கும் மறுபரிசீலனை சான்றினை கடைகள், மக்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். மறுமுத்திரரையிடப்படாத எடை அளவுகளை பயன்படுத்தினால், ரூ.10 ஆயிரம் வரை அபராதம், ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் பொட்டலப் பொருட்களில் அதிக பட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் பெயர், முகவரி, பொருட்களின் எடை, அளவு, தயாரித்த மாதம், வருடம் உள்ளிட்ட குறிப்புகள் இருக்க வேண்டும். குறிப்பு இல்லாத பொட்டலப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள் பற்றிய புகார்களை பொதுமக்கள் TN-LMCTS என்னும் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமும், 9445398770 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்’ என தெரிவித்தார்.

Tags : Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...