×

கோடை மழையால் மாவட்டத்தில் உழவு பணி தொடக்கம்

தர்மபுரி, ஏப்.24: கோடை மழை தீவிரம் அடைந்ததையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் கோடை உழவு பணி துவங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியன முக்கிய சாகுபடியாக உள்ளது. தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியங்களில் நெல் பயிரிடும் பரப்பு அதிகளவில் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் எடுத்துக்கொண்டால் நெல் சாகுபடி 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், கரும்பு 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டில், பருவ மழை பொய்த்த நிலையில், விவசாயம் பாதியாக குறைந்தது. மேலும், மாற்றுத்தொழிலுக்கு பலர் சென்று விட்ட நிலையில், தற்போது ஒரு சிலரே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டை விட தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள கோடை மழையால்,
ஏரிகள், அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் விவசாய கிணறுகளின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி, வத்தல்மலை, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மாடுகள் மற்றும் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்தாண்டை விட, இந்த ஆண்டு நெல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...