×

உள்ளாட்சி தேர்தலுக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு ஆட்சேபனை, கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு

பெரம்பலூர், ஏப். 24: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டது. ஆட்சேபனை, கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் சாதாரண உள்ளாட்சி தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகள், 4 பேரூராட்சிகளில் தலா 15 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 60 வாக்குச்சாவடிகளும், 4 ஊராட்சி ஒன்றியங்களில் 638 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 748 வாக்குச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்  நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களில் ஆட்சேபனை ஏதுமிருந்தால் எழுத்து பூர்வமாக வருகிற மே 2ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பாக பெறப்படும் ஆட்சேபனைகள், கருத்துகளை பரிசீலித்து தேவைப்படின் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் மே 4ம் தேதியன்று தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...