×

தண்டராம்பட்டு அருகே வாட்ஸ்அப்'பில் அவதூறு வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

தண்டராம்பட்டு, ஏப்.21: தண்டராம்பட்டு அருகே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி(34). இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி தரக்குறைவாக பேசி வீடியோ ஒன்றை கடந்த 19ம் தேதி சமூக வலைதளங்களில் பதிவிட்டாராம். சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் அவதூறு வீடியோவை வெளியிட்ட முரளியை கைது செய்ய வலியுறுத்தி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் காட்டாமுந்தி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டிஎஸ்பிகள் ஹேமசித்ரா, அண்ணாதுரை மற்றும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோவை பதிவிட்ட வாலிபரை கைது செய்தால்தான், மறியலை கைவிடுவோம்’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின்னர் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனாலும், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மாலை வெறையூர் போலீசார் அவதூறு பரப்பிய முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்