×

மேலும் ஒருவர் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி, மார்ச் 22: புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலுடன், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 18ம் தேதி இதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று, அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் கூடப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அருணாசலம் என்பவர் புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின், நேற்று முன்தினம் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. 3வது நாளான நேற்று பிற்பகலில் விழுப்புரம் மரகதபுரத்தை சேர்ந்த உலக இளைஞர்கள் நல்வாழ்வு கட்சி நிறுவன தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர், டெபாசிட் பணம் ரூ.25 ஆயிரம் செலுத்தவில்லை. அவரிடம் இருந்து மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் பெற்றுக் கொண்டார்.  

மனு தாக்கலுக்குப்பின் விஜயகுமார் கூறும்போது, உலக இளைஞர் நல்வாழ்வு கட்சி மற்றும் சங்கத்தை நிறுவி நடத்தி வருகிறேன். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு டெபாசிட் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்ற சட்ட விதியை திருத்தவோ, ரத்து செய்யவோ வேண்டும். இதற்காக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர இருக்கிறேன். அதனால் தான் நான், டெபாசிட் செலுத்தவில்லை என்றார். மக்களவை தொகுதிக்கு இதுவரை 2 பேர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு யாரும் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாக்கலையொட்டி வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் தட்டாஞ்சாவடி விவிபி நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் வளாகம் முன்பு துணை ராணுவம் மட்டுமின்றி ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...