×

காலாப்பட்டு முருகன் கோயிலில் பங்குனி உத்திர செடல் உற்சவம்

காலாப்பட்டு, மார்ச் 22: காலாப்பட்டு மாத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலையில் பாலமுருக சாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. 8 மணியளவில் பக்தர்கள் 101 காவடிகள் எடுக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து செடல் உற்சவமும் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஜேசிபி இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், கிரேன், வேன், லாரி, பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வாகனங்களை பாலமுருகன் கோயிலில் இருந்து அலகு குத்தி இழுத்து சென்றனர். இசிஆர் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேரோடும் வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர்.

நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். முருகன் கோயிலில் உள்ள கோபுர கலசத்திற்கு பக்தர்கள் அலகு குத்தி., கிரேன் மூலம் மாலை அணிவித்தனர். இதில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். கோயில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தரப்பினரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் வழங்கினர். தொடர்ந்து, மாலையில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Murugan Temple ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்