×

திமுகவிற்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் சைக்கிளில் பிரசாரம் செய்யும் தொழிலாளி

கிருஷ்ணகிரி, மார்ச் 21: திருவள்ளூர்  மாவட்டம் திருத்தணி அருகே, அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவி(52). ஓட்டல் தொழிலாளியான இவர், தீவிர திமுக தொண்டர். கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தல்  முதல், இதுவரை 6 தேர்தல்களிலும், திமுக வெற்றி பெற தமிழகம் முழுவதும்  சைக்கிளில் பிரசாரம் செய்துள்ளார். தற்போது, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில்  போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற, தனது சைக்கிளில் பிரசார பயணத்தை கடந்த  14ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கினார். இந்த பயணத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி துவக்கி வைத்தார்.  இதையடுத்து  வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளிலும்,  திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி,  திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் தனது பிரசாரத்தை முடித்து கொண்டு, நேற்று  கிருஷ்ணகிரி தொகுதியில் சஞ்சீவி தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.  அப்போது மக்கள்  கூடும் இடங்களில் நின்று, திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை  வெற்றி பெற செய்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி, ஒரு நாளைக்கு 90 கி.மீ சைக்கிளில் பிரசார பயணம் செய்கிறேன். இதுவரை 10  தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி,  வேலூரில் எனது பயணத்தை நிறைவு செய்கிறேன். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, ஹிந்தி  ஆகிய 6 மொழிகளிலும் பேசுவேன். எந்த இடத்தில் எந்த மொழி அதிகம்  பேசுபவர்கள் உள்ளனரோ, அந்த மொழியில்  எனது பிரசாரம் இருக்கும். சில இடத்தில் எதிர்கட்சியினர் மிரட்டுவது உண்டு. அதை நான் கண்டுகொள்வதே இல்லை,’ என்றார். இவர் இன்று (21ம் தேதி) தர்மபுரி மாவட்டத்தில்  பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி