×

பெரம்பலூர் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டை செலவின பார்வையாளர் ஆய்வு

பெரம்பலூர், மார்ச் 20: பெரம்பலூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் துக்ரியா ஆய்வு செய்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு, வீடியோ வியூவிங் குழு, சேவை மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளராக துக்ரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி கலெக்டர் சாந்தா முன்னிலையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை தேர்தல் செலவின பார்வையாளர் துக்ரியா நேற்று ஆய்வு செய்தார்.

அதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுதேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களின் பிரசாரத்துக்காக உள்ளூர் கேபிள் தொலைகாட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து கண்காணிப்பதற்காகவும், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்று உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் மூலமாக செய்தி தாள்களில் வெளிவரும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார விளம்பரங்களை கண்காணித்து அவற்றை வேட்பாளரின் தேர்தல் செலவினத்தில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது, கலெக்டர்  அலுவலக வளாகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு, கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தேர்தல் செலவின பார்வையாளர்  துக்ரியா ஆய்வு செய்தார். மாவட்ட எஸ்பி திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சித்ரகலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசுப்ரமணியன் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...