×

அலங்காநத்தத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரிக்கை

நாமக்கல், மார்ச் 19: நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில், பொதுமக்கள் மனுக்களை போட்டுச்சென்றனர். நாமக்கல்லை அடுத்துள்ள அலங்காநத்தம் பிரிவு பகுதியில், 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாலப்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில்  ஏற்றப்பட்டு, அலங்காநத்தம் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக ஆழ்துளை கிணற்று பைப் லைனில் ஏற்பட்ட பழுது காரணமாக தண்ணீர் விநியோகம் தடைபட்டது. மேலும், காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகிப்பதால், அலங்காநத்தம் பிரிவு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள், தாங்கள் கொண்டு வந்த மனுவை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி